Thursday, February 05, 2015

பிடித்த எழுத்தாளர்கள்

படிப்பதில் ஆசை இருக்கும் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள்.

முதல் இடம் ‘கல்கி’க்குத்தான். நினைவு தெரிந்த நாளில் முதலில் படித்தது கல்கியின் எழுத்துக்கள்தான். மகா எளிமையான மொழி. கதை சொல்லும் உத்தியோ கேட்கவே வேண்டாம். அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். படித்து முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவே மனது வராது. “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, “தியாக பூமி”, “சோலைமலை இளவரசி” இப்படி எத்தனையோ. எல்லாப் புத்தகங்களையும் பலமுறை படித்திருக்கிறேன். “அமர தாரா” தான் ஒரே ஒரு தடவை படித்தது.

கல்கியின் எழுத்துக்கள் பற்றி பலவிதமான விமர்சனங்கள் உண்டு. ஒரு சமீபத்திய எழுத்தாளர் அவர் குழந்தை எழுத்தாளர் என்று எழுதினார். சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர் ஏராளம். அவருடைய சமூகக் கதைகள், அவரின் சரித்திரக் கதைகள் அளவுக்கு அங்கீகாரம் பெற வில்லை என்றே தோன்றுகிறது.
நேர்த்தியான பாத்திரப் படைப்பு, நாம் பேசுவது போலவே எழுதப்பட்ட உரையாடல்கள் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்த இடம் ‘தேவன்’ என்ற கதாசிரியருக்குத்தான். ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’, ‘ஸி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’ இப்படி நிறைய மாஸ்டர்பீஸ்கள் உண்டு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் படியாக எழுதும் மந்திர நடை. அதை நம் கையகப்படுத்திக் கொள்ளுவது மிகவும் சிரமம்.

ரா.கி. ரங்கராஜன் ஒரு ஆச்சரியமான எழுத்தாளர். அவருடைய கற்பனைத் திறன் அசாத்தியமானது. எழுதித் தள்ளிய எழுத்தாளர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர். சரித்திரக் கதை, திகில் கதை, துப்பறியும் கதை, சமூக நாவல் இப்படி எதையும் விட்டு வைக்காதவர். கதை எழுதுவது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தவர்.

நான் கல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்தவர் சுஜாதா. நண்பர்களுக்குள் நடந்த சூடான விவாதங்கள் சுஜாதாவின் கதைகளைப் பற்றியதாகவே இருக்கும். நைலான் கயிறில் ஆரம்பித்தது கதை கதையாக, தொடர் தொடராகத் தொடர்ந்தது. ஒரு மனிதன் இவ்வளவு விஷயங்களைப் பற்றி சுவாரசியம் குறையாமல் எழுத முடியுமா என்று ஆச்சரியப் பட வைத்த எழுத்தாளர் சுஜாதா.

இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்தவர் பா.ராகவன். இவரது இரண்டு அபுனைவுத் தொடர்களைப் படித்தவுடன் அவர் எழுத்து நடையால் கவரப் பட்டேன். அதனால் அவருடைய வலைத் தளம், ட்விட்டர் செய்திகள் ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்து விசிறியாகி விட்டேன். சரியான இளையராஜா, மாக் இவைகளின் வெறியர் என்று தோன்றுகிறது. அதே போல் தன்னுடைய பிழையில்லாத எழுத்தில் அபாரப் பெருமை கொண்டவர். பலருக்கு எழுத்திலும், இலக்கணத்திலும் வாத்தியார். இப்போது இணையத்தில் எழுதப்படும் தமிழில் மலிந்திருக்கும் பிழைகளை எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ தெரியாது. அவ்வப்போது ஒன்றிரு குறுஞ் செய்திகளோடு சரி.


நாக்கைக் கன்னத்துக்குள் மடித்து வைத்துக் கொள்ளுவது என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உள்ளது. அதற்குச் சரியான உதாரணம் எழுத்தாளர் பேயோன். அவருடைய சில ட்விட்டர் செய்திகள் மாணிக்கங்கள். படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. தனக்கு சாகித்ய அகாடமியிலிருந்து நோபல் பரிசு வரை கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, கருத்து உள்ளவர். இறைவன் செவி சாய்ப்பார் என்று நம்புவோம். 

0 comments: