Thursday, October 16, 2014

நானா? எழுத்தாளனா?

எழுதவேண்டுமென்ற ஆசை வெகு நாளாகவே எனக்கு உண்டு. ஆனாலும் அந்த ஆசை முழுவதும் நிறைவேறாமலே இருக்கிறது.

சின்ன வயசிலிருந்தெ புத்தகம் படிக்கும் ஆர்வம் நிறைய. முதலில் தமிழில். வீட்டில் பத்திரிகைகள் வாங்கி அதிலிருந்த தொடர் கதைகளைச் சேர்த்து ‘பைண்ட்’ செய்து வீட்டில் அடுக்கி வைத்திருப்போம். கல்கி, ஆனந்த விகடன் மட்டும் தான்.குமுதம் கிடையவே கிடையாது. அதில் வரும் கதைகள் எங்களைப் போன்ற சிறியவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை என்பது என் அம்மா, அப்பவின் தீர்மானமான முடிவு. பெரும்பாலும் இது அம்மாவின் முயற்சி.

அம்மா ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டியதில்லை. 15, 16 வயதிலேயே கல்யாணம் ஆகி விட்டது. ஆனாலும் கதைகள்படிப்பதை நிறுத்தாமல் குழந்தைகள் பிறந்த பின்னும் தொடர்ந்தார்கள். அப்பாவுடைய உத்தியோகத்தில் ஊர் ஊராக மாற்றுவதால் அவரை வீட்டில் பார்பதே அபூர்வம்.

வாரா வாரம் பத்திரிகை வந்ததும் அதை முதலில் படிப்பதற்கு வீட்டில் ஒரே சண்டை நடக்கும். கல்கியில் வீர விஜயன் என்ற சித்திரக் கதை வந்து கோண்டிருந்தது. எனக்கு மிகவும் இஷ்டமான தொடர். கதை எழுதியது யார் என்று நினைவில்லை. ஆனால் படம் வரைந்தது ‘வினு’.ஒல்லியாக மிகவும் உயரமாக இருக்கும் விஜயன் ஒரு சந்தர்ப்பத்தில் கட்டு மஸ்தான தேகத்துடன் கொஞ்சம் குட்டையாக மிகப் பெரிய வீரனாக மாறி விடுவான்.

எனக்குப் படிக்கத் தெரியும் போதே வீட்டில் இப்படி ‘பைண்ட்’ செய்த புத்தகங்கல் நிறைய இருந்தன. லக்ஷ்மி, தேவன், கல்கி, ஜக சிற்பியன், அகிலன், சரோஜா ராமமூர்த்தி, அனுத்தமா என்று பல புகழ் பெற்ற கதாசிரியர்கள் எழுதிய தொடர்கதைகள்.

அவற்றைப் படிக்கும் போதெல்லாம் மனத்தில் ஒரு ஏக்கம் இருக்கும். நாமும் இப்படி எப்போதுதான் எழுதப் போகிறோமோ  என்று பெரு மூச்சு விடுவேன்.

கல்லூரியில் சேர்ந்த போது, ஆங்கில நாவல்களின் பரிச்சயம் ஏற்பட்டது. பி.ஜி.வுட்ஹவுஸ், டு மாரியா, ஏ.ஜே. க்ரானின், ஸாமர்செட் மாம் என்று படித்துத் தள்ளினேன்.

நான் படிக்கிற காலத்தில் பட்டப்படிப்பு முதல் வருஷம் பரிக்ஷை கிடையாது. ஆகவே சைக்கிளை மிதித்துக் கோண்டு கல்லூரி நூலகத்துக்குப் படை எடுத்து விடுவேன். ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள். அது இரண்டு நாட்களுக்குக் கூடத் தாங்காது. திரும்ப சைக்கிள் ஓட்டம், வேகாத வெய்யிலில்.

இதுபோக உள்ளூர் நூலகத்திலும் மெம்பெராகச் சேர்ந்து அங்கேயும் படிக்க ஆரம்பித்தேன்.
இந்த மாதிரிப் படிப்பு உத்தியோக காலத்திலும் தொடர்ந்தது. முதல் உத்யோகம் கல்லூரி ஆசிரியராக. கேட்க வேண்டுமா, நூலகத்திலேயே பழியாகக் கிடப்பேன். அங்குதான் வெளி நாட்டுப் பத்திரிகைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘டைம்’ ‘ ந்யூஸ்வீக்’ ‘லைப்’ போன்ற பத்திரிகைகள். அப்புறம் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’.

அங்கிருக்கும் போது தெசிய பொழுதுபோக்கான ஐ. ஏ.எஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலோர் இந்தப் பரிக்ஷைக்காக முயற்சிப்பது வழக்கம்.

அதனால்  நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’, அப்புறம் உலக சரித்திரங்கள் என்று பல வகையான புத்தகங்களின் பரிச்சயம் ஏற்பட்டது. ஐ. ஏ.எஸ் தேறவில்லை என்பது வேறு கதை. ஆனால் அதில் செய்த பயிற்சி இன்னொரு நிறுவனத்தில் நல்ல வேலைக்கு வழி செய்தது. அதில் ஆரம்ப சம்பளமே அப்போது வேலை பார்த்து வந்த கல்லூரி முதல்வரின் சம்பளத்தை விட அதிகம்! ஒரே ஓட்டம்தான்.

மும்பையில் வேலை பார்க்கும் போது அலுவலகம் போய் வர ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். ஆகவே கூட்டம் பிதுங்கும் ரயிலில் நெரிசலுக்கு நடுவில் நின்று கொண்டு புத்தகம் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அது ஒன்றுதான் ரயில் பிரயாண சிரமங்களை மறக்க வைக்கும் மருந்து.

ஆரம்ப நாட்களில் ஆபீஸில் ஷிப்ட் உண்டு. ஒரு கம்ப்யூட்டர் டேப்பை மாட்டி விட்டால் அது முடிந்து இன்னொரு டேப் மாட்டுவதற்கு அரை மணி நேரம் ஆகும். அந்த இடைவெளியிலும் படிக்கலாம். பத்திரிகைகள், புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும்.

இப்படியாகப் படிப்பதற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் எழுத வேண்டும் என்கிற ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

என் முதல் சீரியஸ் எழுத்து என் நண்பனுக்கு அப்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பால சந்தரின் பட விமரிசனம் தான். ஜெமினி கணேசன் நடித்த படம். அதைப் படித்த நண்பன் புளகாங்கிதத்துடன் ஓடி வந்தான். ‘ரொம்ப நல்லா இருக்குடா, நீ பேசாமல் எழுத்தாளனாகப் போகலாம்’ என்றான். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒரு பத்திரிகைக்கு நீதிக் கதை ஒன்று எழுதி அனுப்பினேன். ஸ்டாம்ப் வைக்கவிட்டாலும் அது சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு எதையும் பத்திரிகைகளுக்கு அனுப்ப வில்லை.

பயிற்சிக் காலத்தில் ஒரு ‘திடுக்’ கதை எழுதி அலுவலகத்துக்கு உள்ளே வெளியாகும் பத்திரிகைக்குக் கொடுத்தேன். அது பிரசுரமானதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்போது ஏர் இந்தியாவின் ‘எம்ப்பரர் அசோகா’ என்ற விமானம் விமான நிலயத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வெடித்துச் சிதறியது. அதைக் களமாகக் கொண்டு அந்தக் கதையை எழுதியிருந்தேன்.

 அதன் பிறகு உத்தியோகக் கட்டாயத்தில் நிறைய எழுதும் சந்தர்ப்பம் வந்தது. எல்லாம் ஆங்கிலத்தில். உத்தியோகம் சார்ந்த எழுத்துக்கள். மேலதிகாரிகளைத் தலை ஆட்டவைக்கும் ‘நோட்ஸ்’, அலுவலகக் குழந்தைகளுக்கு ‘மான்யுவல்’, ஏகப் பட்ட ‘ப்ரஸென்டேஷன்’ இப்படி வகை வகையாக எழுதிக் குவித்தேன். ஆங்கிலம் மட்டுப் பட்டது; கையகப் பட்டது. எளிமையாக எழுதக் கற்றுக் கொண்டேன்.

தமிழில் எழுதும் வாய்ப்பே வர வில்லை.

ஒரு நாலைந்து வருஷங்களுக்கு முன்னால் வலைப் பதிவுகள் தலை காட்ட ஆரம்பித்தன. இது என் போன்ற ஆட்களுக்கு ஒரு வரப் ப்ரசாதமாகத் தெரிந்தது.

முன்பெல்லாம் நம் எழுத்தை அச்சில் காண்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். தாளின் ஒரு புறம் மட்டும் எழுத வேண்டும். நல்ல கையெழுத்து வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமலிருக்க வேண்டும். பிழைகள் குறைவாக இருக்க வேண்டும். தபாலில் அனுப்பி விட்டுக் காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட தேவதை கண் திறந்தால் பத்திரிகையில் பிரசுரமாகும். இல்லாவிட்டால் ஆழமான கருங்கடலில் கல்லைப் போட்டது போல் மறைந்து போகும்.

ஆனால் வலைப் பதிவுகள் ஆரம்பித்ததிலிருந்து அப்படியில்லை. ஒரு கம்ப்யூட் டர், அதில் வேலை செய்யக் கொஞ்சம் பயிற்சி, ஒரு இன்டர்னெட் இணைப்பு இருந்தால் போதும். வலைப் பதிவு எழுதுவது எளிமையாகி விட்டது. ஒரு ப்ளாக்கர் பகவானோ, இல்லை வொர்ட்ப்ரெஸ் அன்னையோ துணை செய்தால் போதும். டைப் செய்யுங்கள், பிரசுரியுங்கள். தீர்ந்தது விஷயம்! யாராவது படிகிறார்களா இல்லையா என்ற கவலை வேண்டாம். நீங்கள் எழுதியது காலம் காலமாக அழியாமல் நிலைத்து நிற்கும்.

அகஸ்மாத்தாக யாராவது படித்துப் பின்னூட்டம் (கமெண்ட்) போட்டு விட்டால் போதும், தலை கால் புரியாது. அது நம்மைத் திட்டி வந்த பின்னூட்டமாக இருந்தாலும் கவலையில்லை. யாரோ ஒருவர் எப்படியோ நாம் எழுதியதைப் படித்திருக்கிறார்களே, அதுவே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

ஆரம்பத்தில் இந்த மாதிரியான வலைப் பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருந்தன. ஆனால் நம்மவர்கள் சும்மா விடுவார்களா என்ன? உடனே தமிழில் எழுத பல்வேறு ஆயுதங்களைக் கண்டு பிடித்து உதவினார்கள். அவ்வளவுதான், தமிழில் எழுதுவோர் எண்ணிக்கை ஒரே குதியாகக் குதித்து மேலே சென்றது. திரும்பிய இடங்களிலெல்லாம் தமிழ் முழக்கம்.
ஆரம்ப காலத்தில் கடுமையான முயற்சியில் தமிழ் எழுதுவது போய், சுலபமாக எழுதும் முறைகள் வழக்கத்துக்கு வந்தன. தமிழில் தட்டச்சுத் தெரியாமலே என் போன்றவர்கள் ஆங்கில தட்டச்சுப் பலகையில் (அது தானப்பா, கீ போர்ட்) தமிழில் அழகுற எழுத முடிகிறது. இதற்குப் பாடு பட்ட வல்லுனர்கள் அனைவர்க்கும் ஒரு பெரிய வணக்கம்.

இந்த வலைப் பதிவுகள்போடுவதில் வித விதமான அனுபவங்கள் கிட்டும். ‘நல்ல பதிவு நன்றி’ என்ற வகையில் சில பின்னூட்டங்கள். இவை வலையில் தன் பெயரைக் காட்டுவதற்காக ஒரு முயற்சி. சில பின்னூட்டங்கள் உங்களை உசுப்பி விட்டு உன்னைப் போல உண்டா என்று பெருமையில் மார்பை விரிய வைக்கும்.

தருமிக்கு வாய்த்த சோழனின் மந்திரி போல குற்றம் கண்டு பிடித்து ஏசுவதற்காகவே சிலர் அவதாரம் எடுத்திருப்பார்கள். சிலர் விரும்பத்தகாத வார்த்தைகளில் பின்னூட்டம் போடுவார்கள். வேறு சிலர் தம்முடைய வலைப் பதிவில் கன்னா பின்னா என்று நாம் எழுதிய வலைப் பதிவைத் திட்டி எழுதுவார்கள். ரொம்பவும் ரோசமாக இருக்கும் நமக்கு.
“வேணும்னா படிக்கட்டும், இல்லேனா பேசாமல் இருக்க வேண்டியதுதானே! எதற்காக இந்தத் தண்டனை” என்று தோன்றும்.


இந்தத் திட்டலுக்குப் பலவித காரணங்கள் இருக்கலாம். நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது அந்த விஷயத்தில் நாம் வெளியிட்ட கருத்துக்கள் பிடிக்காமல் போகலாம். மொழியை நன்றாக எழுதாமல் விட்டிருக்கலாம். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருக்கலாம்.