Wednesday, January 21, 2015

எப்படி எழுதுவது?

இது மிகவும் சுவாரசியமான கேள்வி. எழுத வேண்டும் என்று ஆசைப் படும் எல்லோருக்கும் எழும் கேள்வி இது.
இந்தத் தலைப்பிலேயே நூறாயிரம் வலைப் பதிவுகள் இருக்கின்றன. அவை இலவசமாக ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றன. அதைப் படிப்பவர்கள் இருப்பதால் தானே எழுதுகிறார்கள்?
புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இதைப் பற்றி புத்தகங்களே எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதிக் குவிக்கிறார்களே, இவர்கள் எப்படித்தான் எழுதுகிறார்கள் என்ற ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஆசையாக இருக்கும் தானே?
இதோ சில ரகசியங்கள்:
1.    தினமும் எழுத வேண்டும். எவ்வளவு என்பது முக்கியமில்லை. எழுதுவதுதான் முக்கியம். 300 வார்த்தைகளாகவும் இருக்கலாம், 3000 வார்த்தைகளாகவும் இருக்கலாம்.
2.    தினமும் ஒரே நேரத்தில் எழுதிப் பழக வேண்டும். சிலருக்கு காலை வேளையில் எழுத ஓடும்; சிலருக்கு மதியம்; சிலருக்கு அர்த்த ராத்திரியில் தான் எழுதத் தோன்றும்.
3.    எழுதும் போது கவனச் சிதறல் கூடாது. ஈ-மெயில் கூடாது; முக நூல் கூடாது; வலைத்தள ஆராய்ச்சி கூடாது; தொலை பேசி கூடாது; யாருடனும் பேசுவதும் கூடாது.
4.    எதைப் பற்றிஎழுதப் போகிறோம் என்று எழுதுவதற்கு முன்பாகவே நிர்ணயம் செய்து கொள்ளுவது நல்லது. எழுதுவதற்கு வேண்டிய ஆராய்ச்சிகள், படிப்புகள் எல்லாம் முன்னாலேயே செய்து கொண்டு விட்டால் எழுதும் போது கவனச் சிதறல் ஏற்படாது.
5.    எழுத ஆசைப் படுபவர்கள் நிறையப்படிக்க வேண்டும். இது மற்றவர் எழுத்தை காப்பி அடிப்பதற்காக இல்லை. எழுத்தில் அவர்களது ஆளுமை, சொற்கள் தேர்ந்தெடுக்கும் விதம், வாக்கியங்கள் அமைக்கும் முறை, உரையாடலின் சிறப்பு இப்படி பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். கையில் அகப்படுவது எல்லாவற்றையும் படிப்பது நல்லது. இதைப் பற்றித்தான் நான் எழுதப் போகிறேன், ஆகவே அதைப் பற்றி மட்டும் படித்தால் போதும் என்று இருக்கக் கூடாது.
6.    அடிப்படை இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். பிழைகள் இல்லாமல் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
7.    எழுதியதை உரக்கச் சொல்லிப் பார்ப்பது நல்லது. இந்த முறையில் நெருடலான சொற்களைத் தவிர்த்து விடலாம். வாக்கியங்கள் நன்றாக அமைந்திருக்கிறதா என்று தெரிந்து விடும். எழுத்தில் எளிமை கூடும்.
8.    நல்ல நண்பரின் உதவியைக் கேட்க வேண்டும். எழுதியதை அவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லலாம். திருத்தங்களை மனம் கோணாமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

9.    எழுதியதை மறுபடியும் மறுபடியும் படித்துச் செப்பனிட வேண்டும். இப்படிச் செய்தால் எழுத்தில் மெருகு கூடும். முதல் தடவை எழுதியதே சிறப்பாக இருக்கிறது என்று ஒரு போதும் நினைத்து விடக் கூடாது.

0 comments: