Saturday, February 22, 2014

காலை நடை

இதில் எனக்கு தேர்ச்சி உண்டு.

நீங்கள் மாக்ஸ் பீர்போம் எழுதிய கட்டுரையை ("seeing people off") படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே படித்து விடுங்கள். "எனக்கு இதில் தேர்ச்சி இல்லை" என்று ஆரம்பித்திருப்பார். கட்டுரை விஷயம் வேறு என்றாலும் இந்த துவக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கட்டுரையை ஏறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்னால் என்னுடைய கல்லூரி உரை நடைப் புத்தகத்தில் படித்தேன்.

போகட்டும். நான் இப்போது சொல்ல வந்தது என்னுடைய காலை நடையைப் பற்றியது. நானும் கடந்த 25 வருஷங்களாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

உலகத்தின் பல தெருக்களில் நடந்திருக்கிறேன். வெய்யில், மழை, உறை பனி இப்படி எது இருந்தாலும் கவலைப் படாமல் நடந்திருக்கிறேன். கனத்த ஷு, இல்லை மெல்லிய செருப்பு இப்படி எது கிடைத்தாலும் காலில் மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன்.

நடக்கும் போது பலர் காதில் மாட்டிக் கொண்டு நடப்பார்கள். அதன் மறு முனையில் செல் போன் அல்லது பாட்டு பாடும் கருவி இருக்கலாம். இது எனக்கு பிடிக்காத விஷயம்.

காலை வேளை நடையில் தனி சுகம். வித விதமான சப்தங்கள் காதில் விழும். அண்ணாந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஆனால் மரங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பறவைகள் எழுப்பும் இதமான ஒலிகளைக் கேட்டிருக்கிறீர்களா? காதில் மாட்டிக் கொண்டால் இது எப்படி காதில் விழும்?

நடக்கும் மற்றவர்களை கவனிப்பதில் ஒருஅலாதியான சுவரசியம் இருக்கத்தான் செய்கிறது.

பலர் கணவன் மனைவியாக நடக்கிறார்கள். சில ஜோடி மௌனமாக நடக்கும். சிலர் நிறுத்தாமல் பேசிக் கொண்டே நடப்பார்கள். சின்ன சண்டை கூட போடப்படுகிரதோ என்று எனக்குத் தோன்றும்.

நண்பர்களாக சிலர் நடப்பார்கள்.பெரும் பாலும் அரசியல் பேச்சாக இருக்கும். எல்லா தலைவர்களின் தலையும் உருளும். அரசியல் என்றாலே சண்டை இல்லாமலா? அதுவும் நடந்து பார்த்திருக்கிறேன்.

காலை வேளையில் சிலர் கூடி பலத்த சத்தம் போட்டு செயற்கையாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு விஷயம் கவனித்தேன். அப்படி கூடி சிரிப்பவர்கள் எல்லாரும் வயசானவர்கள். (60++). அவர்களுக்குத் தான் அப்படி சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ?


0 comments: