Saturday, April 19, 2014

மெதுவாகப் படிக்கும் இயக்கம்

உங்களுக்குத் தெரியுமொ? மெதுவாக, ஆற அமரப் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு இயக்கமே இருக்கிறதாமே?

இப்போதெல்லாம் நாம் படிக்கும் முறையே மாறியிருப்பது கண்கூடு. எந்தப் பக்கத்தையும் முழுதாகப் படிக்கும் வழக்கமே போய் விட்டது. இதற்குக் காரணம் இணையத்தின் தாக்கம் தான். அதில் படித்துப் படித்து, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் தாவித் தாவி நுனிப்புல் மேய்வது ஒரு இயல்பாகி விட்டது. பக்கம் முழுவதும் படிக்கப் பொறுமையில்லை.

இந்த கெட்ட வழக்கம் புத்தகம் படிப்பதற்கும் பரவி விட்டதும் தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

முன்பெல்லாம் புத்தகக் கடையில் நமக்கு வேண்டிய புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க என்ன செய்வோம்? அட்டைப்படம் பார்ப்போம்; புத்தகத்தைத் திருப்பி பின் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தைப் படிப்போம்; அப்படியும் முடிவு செய்ய முடிய வில்லை என்றால் பக்கங்களைத் திருப்பி வேகமாக சில பக்கங்களைப் படிப்போம். புத்தகம் பிடித்திருந்து வாங்கிப் போனால், வீட்டில் ஆற அமர உட்கார்ந்து புத்தக வாசனையை முகர்ந்து கொண்டு படிக்க ஆரம்பிப்போம்.

இப்போதெல்லாம் படிப்பதில் ஒரு அவசரம். கவனமின்மை. படிப்பது எதுவும் புரிவதில்லை.

இணையம் நமது புத்தியை மழுங்கடித்து விட்டது என்று ஒரு பெரிய புத்தகம் கூட வந்து விட்டது.

இதில் உண்மை இருக்கிறது என்பது என் அனுபவத்திலேயே தெரிகிறது. ஒரு பத்துப் பக்கம் ஒரேயடியாகப் படிக்க முடிவதேயில்லை.

இதனால்தான் இப்படிப் பட்ட இயக்கம் துவங்கியுள்ளது. ஈ-புக் படிக்கலாம்; ஆனால் தனியாக அதற்காக வந்துள்ள கருவிகளின் மூலம். அப்போதுதான் வேறு எதிலும் கவனம் போகாது. ஒரே மூச்சில் படிப்பது தேவையில்லை. மெதுவாக வார்தைகளின் அழகு, அவற்றைக் கோர்க்க முயற்சி செய்யும் கதாசிரியரின் திறமை, இவற்றை அனுபவித்துப் படிக்க வேண்டுமென்பது இந்த இயக்கத்தினரின் நோக்கம்.

ட்விட்டர், பேஸ்புக் யுகக் குழந்தகளுக்கு இது மிகவும் அவசியம்.

0 comments: