Wednesday, January 21, 2015

ஸ்பூர்த்தி என்கிற தேவதை

நீங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பவரா? அப்படியானால் இந்தக் குட்டி தேவதையைத் தெரியாமல் இருக்க முடியாது.
குட்டி உருவம். அதற்குள்ளே பூதாகரமான இசைத் திறன். கேட்பவரைக் கட்டிப் போடும் குரல், இசை ஞானம். பாடும் போது அந்த இசைக்குள் மூழ்கித் திளைத்து விகசிக்கும் உருண்டை முகம்.
இத்தனைக்கும் இந்தப் பெண்ணிற்கு 9 வயதுதான் ஆகிறது. அதற்குள் அபாரமான திறமை வெளிப்படுகிறது.
கர்னாடக இசையில் கோர்த்த திரைப் பாடல்களைப் பாடுவதில் அசாத்தியமான திறமை. ரெஹ்மானாகட்டும், சங்கர் மஹாதேவனாகட்டும், சுதா ரகுனாதனாகட்டும், உண்ணி கிருஷ்ணனாகட்டும், SPB  ஆகட்டும், இந்தக் குழந்தையைப் பாராட்டதவர்களே கிடையாது.
ஆரம்பத்திலேயே ஜேம்ஸ் வசந்தன் சொல்லி விட்டார்: “உன்னை ஃபைனல்ஸில் சந்திக்கிறேன்”. எத்தனை உண்மையான வார்த்தைகள்!
இச் சிறுமி பாடும் போது சில சமயம் ஆனந்தத்தில் தொண்டையை அடைக்கிறது.
ஃபைனல்ஸில் வர வேண்டுமே என்று பதைப்பாக இருந்தது. எழுத்தாளர் பா. ரா தனது ட்விட்டரில் சரியாக எழுதினார்: “ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஃபைனல்ஸில் புகுந்து விட்டாள், இனிமேல் நம் வேலையை செய்யப் போகலாம்.”
ஏதாவது ஒரு பரிசாக வாங்க வேண்டுமே என்று மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. முடிவு எப்போதுமே பார்வையாளர்கள் வாக்குகளை நம்பி இருப்பதால் எதுவும் நடக்கலாம். சென்ற போட்டிகளில் சுகன்யா, பிரகதி ஆகியோர்களுக்கு ஆன கதி ஸ்பூர்த்திக்கும் ஆகலாம்.
என்ன ஆனால் என்ன, ஸ்பூர்த்தி என்கிற குட்டி தேவதையை மறக்க முடியாது. அவள் அப்பா அவள் கடைசிச் சுற்றுக்குப் போகும் போது சொன்னார்: “ஸ்பூர்த்தி போன்ற குழந்தையைப் பெற்றதற்கு நாங்கள்கொடுத்துவைத்திருக்க வேண்டும்.”
என் வயதிற்கு இப்படி நினைக்கிறேன்: “ஸ்பூர்த்தி போல ஒரு பேத்தி கிடைத்தால் போதும்.”

சந்தோஷ் சொன்னது போல, இத்தனை புகழ்ச்சியும் தலையில் கர்வமாக ஏறாமல் இருக்க வேண்டும். இதில் அவள் தாய் தந்தையின் முயற்சி அவசியம்.

0 comments: