இப்போதுதான் தேவனின் “மிஸ்டர் வேதாந்தம்” படித்து
முடித்தேன். முன்னாலேயே படித்ததுதான். இப்போதும் அதே மாஜிக் இருப்பதுதான் விசேஷம்.
என்ன மாதிரி கதை சொல்லும் திறன்! என்ன ஒரு எழுத்து! இன்னும்
மெய்மறந்து நிற்கிறேன்.
சில பாட்ஸ்மென் விளையாடும் போது மிகவும் சுலபமாக
விளையாடுவது போல் இருக்கும். அப்படி விளையாடுவதற்குப் பின்னால் இருக்கும் கடுமையான
உழைப்பு நமக்குத் தெரியாது. அவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள். உழைப்பு மட்டும்
இல்லை, ஒரு விதமான திறமை, மற்றவர்களிடம் இல்லாத திறமை இருப்பது நிஜம்.
நம் தேவனும் அப்படித்தான். ரொம்ப சுலபமாக எழுதி விடுகிறாரே
என்று நமக்குத் தோன்றும். அதற்குப் பின்னால் இருக்கும் அசாத்திய உழைப்பு, பல
வருடங்கள் எழுதியதால் பண்பட்ட நடை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள், வாக்கியங்கள் வந்து
விழும் லாகவம், இவை எல்லாமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை தான்.
எழுத்தைத் தொழிலாக எடுக்க நினைக்கும் எவருக்கும் மிஸ்டர்
வேதாந்தத்தின் வாழ்க்கை நல்ல பாடம். அவரைக் கை கொடுத்துத் தூக்கி விட ஒரு சிங்கம்,
ஒரு ஸ்வாமி இருந்தார். அப்படி எல்லோருக்கும் அமைவதில்லை.
எப்படி எழுத வேண்டும், எப்படி எழுத்தை உபாஸிக்க வேண்டும், எப்படி
விடா முயற்சி அவசியம் என்ற பல விஷயங்களை தேவன் அனாயசமாக எடுத்து விடுகிறார்.
கவனமாகப் படித்துப் பார்த்தால், தேவன் எப்படி கதையை
நகர்த்திக் கொண்டு போகிறார் என்பது தெரிய வரும். கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றையும்
ஒரு மாய உளி கொண்டு செதுக்கியிருக்கிறார். அவை உயிர் பெற்று நம்முடன் பழகுகின்றன,
பேசுகின்றன.
சம்பாஷணை மூலமாகவே கதையை நகர்த்திக் கொண்டு போகும் உத்தி
தேவனுக்குக் கை வந்தது. ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை என்பது கிடையாது. இப்போது
அலங்காரமாக எழுதும் சிலர் இந்த எழுத்துக்களைப் படிக்க வேண்டும்.
இப்போது நாமிருக்கும் காலத்தில், சிலவற்றைப் படிக்கும் போது
ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு விமானப் பயணம் ஆறு மணி
நேரம் ஆயிற்று. இப்போது அதே தூரத்தை
இரண்டு மணி நேரங்களில் கடந்து விட முடியும். இரயிலில் மூன்றாம் வகுப்பு இருந்தது.
எல்லா ரயில்களும் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று சென்றிருக்கிறது.
எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக பேப்பரில் பேனா கொண்டு எழுதித்
தீர்த்திருக்கிறார்கள்.
எவ்வளவு காலங்கள் உருண்டு ஓடினாலும் மாறாத சில விஷயங்கள்
உண்டு. பிறருக்கு நன்மை செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உதவி
செய்யும் மனிதர்கள், பிறரை ஏமாற்றும் அயோக்ய சிகாமணிகள், பொறாமை பிடித்து அலையும்
மனிதர்கள், வார்த்தைகளின் நிஷ்டூரங்களிலேயெ மனதைக் குத்தி எடுக்கும் அற்பப்
பதர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.