Friday, January 23, 2015

மொழிபெயர்ப்பு

எழுதும் ஆர்வம் வந்தபிறகு எதைப் பற்றி எழுதுவது என்பது பெரிய கேள்விக் குறியானது. சிறு கதையா? நாவலா? அபுனைவுக் கட்டுரைகளா? இப்படிப் பல கேள்விகள் எழுந்தன எனக்குள்.
ஏன் நல்ல புத்தகங்களை (ஆங்கிலத்தில் வந்ததை) மொழி பெயர்த்துப் பார்க்கக் கூடாது? இது எழுத்துக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று தோன்றியது. முதல் விஷயம், எழுதும் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏற்கனவே யாரோ ஒருவரெழுதி வைத்திருக்கிறார். நம்முடைய வேலை சுவை குறையாமல் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியதுதான்.

இந்த எண்ணம் வந்த பிறகு சில மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்தேன். எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்று கவனித்தேன். மொழிபெயர்ப்பு என்று தெரியும்படியாகவே இல்லை. தமிழிலேயே எழுதப் பட்ட நூலாகத் தெரிந்தது.
எந்த நூலை மொழிபெயர்த்துப் பார்ப்பது? என்னுடைய வாசிப்பு ஒரு மாதிரியானது. கதை, கட்டுரை இப்படி ஒன்றும் விலக்கற்பாடில்லை. எனக்குப் பிடித்தமான புத்தகம் ஒன்றைஎடுத்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இந்த வேலையை ஆரம்பித்ததும்தான் இது எத்தனை சிரமமான வேலை என்று புரிந்தது. கொஞ்ச நாட்கள் முன்பாக கிழக்குப் பதிப்பகம் மூலமாக நடத்தப்பட்ட மொழிபெயர்ப்புப் பட்டறையின் ஒலி வடிவத்தைக் கேட்டேன். அதில் பேசிய மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் கூறிய விஷயங்களைக் கவனமாகக் கேட்டேன்.

மொழிபெயர்ப்பில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது. இரண்டு, எழுதியதை உள்வாங்கிக் கொண்டு தன் நடையில் எழுதுவது. முதல்முறையில் மிகவும் சிரமங்கள் உண்டு. ஆங்கில பழக்க வழக்கங்கள் வேறு, நம் வழக்கங்கள் வேறு. ஆகவே அவற்றைச் சொல்லும்  வழியும் மொழியும் வேறு. பார்க்கலாம் என்று துணிந்து காரியத்தில் ஈடு பட்டேன்.

முதல் புத்தகம் Children’s Geetha. திரு ராமானந்த ப்ரசாத் Ph.D எழுதிய புத்தகம். 
சிறுவர்களுக்கான கீதை. கதைகளைக் கலந்து கீதையின் முக்கியமான ஸ்லோகங்களைப் பற்றி விவரிக்கும் நூல். ஆரம்பத்தில் வேகமாகச் சென்ற மொழிபெயர்ப்பு அத்தியாயங்கள் போகப் போக மெதுவாகிப் போனது. மூல நூலில் சொல்லப்பட்ட கனமான விஷயங்களை மொழி பெயர்க்க நமக்கே கீதையைப் பற்றி நிறையத் தெரிந்திருக்க வேண்டும்.
இது நடந்து கொண்டிருக்கும் போதே இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்க முயற்சி செய்தேன்.

அதுல் கவாண்டே என்ற அமெரிக்க சர்ஜன் எழுதிய Cheklist manifesto. மிக அருமையான புத்தகம். மிக அருமையான எழுத்தாளர். இதிலும் கொஞ்சப் பக்கங்கள் மொழி பெயர்த்தபின் வேகத் தடையாயிற்று. மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்தைகளுக்கு சரியான மொழிபெயர்ப்பு தெரியாததால் விளைந்த தடை இது. ஆனாலும் சமாளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச வருஷங்கள் முன்னால் குமுதம் இதழில் ‘ரத்தக் குழாயில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற தொடர் வந்தது. ஐஸக் அஸிமோவ் எழுதிய Fantastic Voyage என்ற புத்தகத்தின் அற்புதமான மொழிபெயர்ப்பு. அதன் ஆசிரியர் மொழிபெயர்ப்பில் கில்லாடியான ரா.கி. ரங்கராஜனாக இருக்க வேண்டும். அஸிமோவ் அதற்குப் பிறகு  Fantastic Voyage II எழுதியிருக்கிறார். ரொம்பவும் சுவையான நாவல். இதை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆனந்த் நீலகண்டன் என்பவர் ASURA  என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ராவணனைப் பற்றி அவன் சிறு பிராயத்திலிருந்து விவரிக்கும் புத்தகம். இது இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட கதை. இதிலும் இரன்டு அத்தியாங்கள் போயிருக்கின்றன.

நடுவில் அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் பற்றி “Nowhere to Hide” என்ற புத்தகத்தைப் படிக்க நேரிட்டது. எந்த விதமான த்ரில்லருக்கும் குறைவில்லாத நிஜக் கதை. இதை மொழிபெயர்க்க ஆசையாக இருந்தது. இதை “ஒளிவதற்கு இடமில்லை” என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வருகிறேன்.

இதெல்லாம் என் சொந்த முயற்சி. காபிரைட் விஷயங்களால் இதைஎல்லாம் வெளியிட முடியுமா என்று தெரியாது. ஆனாலும் எழுதிப் பழக இது மிக நல்ல பயிற்சியாக அமைந்தது.

இப்போது வெளிவரும் பல தமிழ் புத்தகங்களுக்கே மொழிபெயர்ப்புத் தெவையாக இருப்பது வேறு விஷயம்!!

Thursday, January 22, 2015

கல்கி குழந்தை எழுத்தாளரா?

"இதென்ன கூத்து?" என்று உங்களுக்குத் தோன்றலாம்.

சமீபத்தில் எழுத்தாளர் ஜயமோகன் தான் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். கல்கியின் எழுத்து மிகவும் எளிமையாகஒரு குழந்தைக்கும் புரியும் படியாக இருக்கிறதாம். ஆகவே அவர் சிறுவர்களுக்கு எழுதுபவராம்.

தன்னுடைய எழுத்தைப் படிப்பதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இதைப் படித்ததும் சிரிப்புத்தான் வந்தது. கல்கியின் எழுத்தைக் கொண்டாடும் எனக்கு முதலில் வந்த கோபத்துக்கு அளவே இல்லை. சரி, அந்த ஆளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.

கல்கி, தேவன், சாவி முதலானோர் எழுத்தின் வலிமையே அதன் எளிமைதான். வேண்டாத சொற்கள் இருக்காது. அலங்கார நடை என்று இப்போது நினைத்துக் கொண்டு பேத்துகிறார்களே, அது சிறிதும் கிடையாது.

இலக்கியம் என்றால் புரியாமல் எழுத வேண்டும் என்று யார் சொன்னது?

கல்கி எழுதிய காலத்தில் எழுதுவதற்கு இப்போது இருக்கும் வசதிகள் கிடையாது. பத்திரிகைகள் தான் எழுத்து வர ஒரே வழி. இப்போது போல வலைப் பதிவு கிடையாது. எழுதுவதை சுலபமாக்கும் மென்பொருட்கள் இல்லை. இப்போது புழங்கும் பல வார்த்தைகள் அப்போது கிடையாது. ஆனாலும் மிக எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவில் அவர்கள் எழுத்துக்கள் இருந்தன.

கல்கி எழுதாத சரித்திரமா? நையாண்டி எழுத்தில் அவரை மிஞ்ச யார் இருக்கிறார்கள்? அவர் எழுதாத சமூகக் கதைகளா?

அடப் போங்கையா! 

Wednesday, January 21, 2015

ஸ்பூர்த்தி என்கிற தேவதை

நீங்கள் சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்ப்பவரா? அப்படியானால் இந்தக் குட்டி தேவதையைத் தெரியாமல் இருக்க முடியாது.
குட்டி உருவம். அதற்குள்ளே பூதாகரமான இசைத் திறன். கேட்பவரைக் கட்டிப் போடும் குரல், இசை ஞானம். பாடும் போது அந்த இசைக்குள் மூழ்கித் திளைத்து விகசிக்கும் உருண்டை முகம்.
இத்தனைக்கும் இந்தப் பெண்ணிற்கு 9 வயதுதான் ஆகிறது. அதற்குள் அபாரமான திறமை வெளிப்படுகிறது.
கர்னாடக இசையில் கோர்த்த திரைப் பாடல்களைப் பாடுவதில் அசாத்தியமான திறமை. ரெஹ்மானாகட்டும், சங்கர் மஹாதேவனாகட்டும், சுதா ரகுனாதனாகட்டும், உண்ணி கிருஷ்ணனாகட்டும், SPB  ஆகட்டும், இந்தக் குழந்தையைப் பாராட்டதவர்களே கிடையாது.
ஆரம்பத்திலேயே ஜேம்ஸ் வசந்தன் சொல்லி விட்டார்: “உன்னை ஃபைனல்ஸில் சந்திக்கிறேன்”. எத்தனை உண்மையான வார்த்தைகள்!
இச் சிறுமி பாடும் போது சில சமயம் ஆனந்தத்தில் தொண்டையை அடைக்கிறது.
ஃபைனல்ஸில் வர வேண்டுமே என்று பதைப்பாக இருந்தது. எழுத்தாளர் பா. ரா தனது ட்விட்டரில் சரியாக எழுதினார்: “ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஃபைனல்ஸில் புகுந்து விட்டாள், இனிமேல் நம் வேலையை செய்யப் போகலாம்.”
ஏதாவது ஒரு பரிசாக வாங்க வேண்டுமே என்று மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. முடிவு எப்போதுமே பார்வையாளர்கள் வாக்குகளை நம்பி இருப்பதால் எதுவும் நடக்கலாம். சென்ற போட்டிகளில் சுகன்யா, பிரகதி ஆகியோர்களுக்கு ஆன கதி ஸ்பூர்த்திக்கும் ஆகலாம்.
என்ன ஆனால் என்ன, ஸ்பூர்த்தி என்கிற குட்டி தேவதையை மறக்க முடியாது. அவள் அப்பா அவள் கடைசிச் சுற்றுக்குப் போகும் போது சொன்னார்: “ஸ்பூர்த்தி போன்ற குழந்தையைப் பெற்றதற்கு நாங்கள்கொடுத்துவைத்திருக்க வேண்டும்.”
என் வயதிற்கு இப்படி நினைக்கிறேன்: “ஸ்பூர்த்தி போல ஒரு பேத்தி கிடைத்தால் போதும்.”

சந்தோஷ் சொன்னது போல, இத்தனை புகழ்ச்சியும் தலையில் கர்வமாக ஏறாமல் இருக்க வேண்டும். இதில் அவள் தாய் தந்தையின் முயற்சி அவசியம்.

எப்படி எழுதுவது?

இது மிகவும் சுவாரசியமான கேள்வி. எழுத வேண்டும் என்று ஆசைப் படும் எல்லோருக்கும் எழும் கேள்வி இது.
இந்தத் தலைப்பிலேயே நூறாயிரம் வலைப் பதிவுகள் இருக்கின்றன. அவை இலவசமாக ஆலோசனைகளை அள்ளி வழங்குகின்றன. அதைப் படிப்பவர்கள் இருப்பதால் தானே எழுதுகிறார்கள்?
புகழ் பெற்ற எழுத்தாளர்களும் இதைப் பற்றி புத்தகங்களே எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதிக் குவிக்கிறார்களே, இவர்கள் எப்படித்தான் எழுதுகிறார்கள் என்ற ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஆசையாக இருக்கும் தானே?
இதோ சில ரகசியங்கள்:
1.    தினமும் எழுத வேண்டும். எவ்வளவு என்பது முக்கியமில்லை. எழுதுவதுதான் முக்கியம். 300 வார்த்தைகளாகவும் இருக்கலாம், 3000 வார்த்தைகளாகவும் இருக்கலாம்.
2.    தினமும் ஒரே நேரத்தில் எழுதிப் பழக வேண்டும். சிலருக்கு காலை வேளையில் எழுத ஓடும்; சிலருக்கு மதியம்; சிலருக்கு அர்த்த ராத்திரியில் தான் எழுதத் தோன்றும்.
3.    எழுதும் போது கவனச் சிதறல் கூடாது. ஈ-மெயில் கூடாது; முக நூல் கூடாது; வலைத்தள ஆராய்ச்சி கூடாது; தொலை பேசி கூடாது; யாருடனும் பேசுவதும் கூடாது.
4.    எதைப் பற்றிஎழுதப் போகிறோம் என்று எழுதுவதற்கு முன்பாகவே நிர்ணயம் செய்து கொள்ளுவது நல்லது. எழுதுவதற்கு வேண்டிய ஆராய்ச்சிகள், படிப்புகள் எல்லாம் முன்னாலேயே செய்து கொண்டு விட்டால் எழுதும் போது கவனச் சிதறல் ஏற்படாது.
5.    எழுத ஆசைப் படுபவர்கள் நிறையப்படிக்க வேண்டும். இது மற்றவர் எழுத்தை காப்பி அடிப்பதற்காக இல்லை. எழுத்தில் அவர்களது ஆளுமை, சொற்கள் தேர்ந்தெடுக்கும் விதம், வாக்கியங்கள் அமைக்கும் முறை, உரையாடலின் சிறப்பு இப்படி பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம். கையில் அகப்படுவது எல்லாவற்றையும் படிப்பது நல்லது. இதைப் பற்றித்தான் நான் எழுதப் போகிறேன், ஆகவே அதைப் பற்றி மட்டும் படித்தால் போதும் என்று இருக்கக் கூடாது.
6.    அடிப்படை இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். பிழைகள் இல்லாமல் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
7.    எழுதியதை உரக்கச் சொல்லிப் பார்ப்பது நல்லது. இந்த முறையில் நெருடலான சொற்களைத் தவிர்த்து விடலாம். வாக்கியங்கள் நன்றாக அமைந்திருக்கிறதா என்று தெரிந்து விடும். எழுத்தில் எளிமை கூடும்.
8.    நல்ல நண்பரின் உதவியைக் கேட்க வேண்டும். எழுதியதை அவரிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொல்லலாம். திருத்தங்களை மனம் கோணாமல் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

9.    எழுதியதை மறுபடியும் மறுபடியும் படித்துச் செப்பனிட வேண்டும். இப்படிச் செய்தால் எழுத்தில் மெருகு கூடும். முதல் தடவை எழுதியதே சிறப்பாக இருக்கிறது என்று ஒரு போதும் நினைத்து விடக் கூடாது.