Thursday, April 09, 2015

தேவன் மாஜிக்

இப்போதுதான் தேவனின் “மிஸ்டர் வேதாந்தம்” படித்து முடித்தேன். முன்னாலேயே படித்ததுதான். இப்போதும் அதே மாஜிக் இருப்பதுதான் விசேஷம்.

என்ன மாதிரி கதை சொல்லும் திறன்! என்ன ஒரு எழுத்து! இன்னும் மெய்மறந்து நிற்கிறேன்.
சில பாட்ஸ்மென் விளையாடும் போது மிகவும் சுலபமாக விளையாடுவது போல் இருக்கும். அப்படி விளையாடுவதற்குப் பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பு நமக்குத் தெரியாது. அவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள். உழைப்பு மட்டும் இல்லை, ஒரு விதமான திறமை, மற்றவர்களிடம் இல்லாத திறமை இருப்பது நிஜம்.

நம் தேவனும் அப்படித்தான். ரொம்ப சுலபமாக எழுதி விடுகிறாரே என்று நமக்குத் தோன்றும். அதற்குப் பின்னால் இருக்கும் அசாத்திய உழைப்பு, பல வருடங்கள் எழுதியதால் பண்பட்ட நடை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள், வாக்கியங்கள் வந்து விழும் லாகவம், இவை எல்லாமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவை தான்.

எழுத்தைத் தொழிலாக எடுக்க நினைக்கும் எவருக்கும் மிஸ்டர் வேதாந்தத்தின் வாழ்க்கை நல்ல பாடம். அவரைக் கை கொடுத்துத் தூக்கி விட ஒரு சிங்கம், ஒரு ஸ்வாமி இருந்தார். அப்படி எல்லோருக்கும் அமைவதில்லை.

எப்படி எழுத வேண்டும், எப்படி எழுத்தை உபாஸிக்க வேண்டும், எப்படி விடா முயற்சி அவசியம் என்ற பல விஷயங்களை தேவன் அனாயசமாக எடுத்து விடுகிறார்.
கவனமாகப் படித்துப் பார்த்தால், தேவன் எப்படி கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் என்பது தெரிய வரும். கதா பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாய உளி கொண்டு செதுக்கியிருக்கிறார். அவை உயிர் பெற்று நம்முடன் பழகுகின்றன, பேசுகின்றன.
சம்பாஷணை மூலமாகவே கதையை நகர்த்திக் கொண்டு போகும் உத்தி தேவனுக்குக் கை வந்தது. ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை என்பது கிடையாது. இப்போது அலங்காரமாக எழுதும் சிலர் இந்த எழுத்துக்களைப் படிக்க வேண்டும்.

இப்போது நாமிருக்கும் காலத்தில், சிலவற்றைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு விமானப் பயணம் ஆறு மணி நேரம் ஆயிற்று.  இப்போது அதே தூரத்தை இரண்டு மணி நேரங்களில் கடந்து விட முடியும். இரயிலில் மூன்றாம் வகுப்பு இருந்தது. எல்லா ரயில்களும் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று சென்றிருக்கிறது. எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக பேப்பரில் பேனா கொண்டு எழுதித் தீர்த்திருக்கிறார்கள்.

எவ்வளவு காலங்கள் உருண்டு ஓடினாலும் மாறாத சில விஷயங்கள் உண்டு. பிறருக்கு நன்மை செய்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு உதவி செய்யும் மனிதர்கள், பிறரை ஏமாற்றும் அயோக்ய சிகாமணிகள், பொறாமை பிடித்து அலையும் மனிதர்கள், வார்த்தைகளின் நிஷ்டூரங்களிலேயெ மனதைக் குத்தி எடுக்கும் அற்பப் பதர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

Sunday, February 22, 2015

ஸ்பூர்த்தி ! ஸ்பூர்த்தி !

அப்பாடா! ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஜெயிச்சாச்சு! “ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“எல்லாம் இன்பமயம்” என்று ஸ்பூர்த்தி எடுத்ததுமே தெரிந்து விட்டது, இன்னிக்கு ஒரு சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கப் போகிறாள் என்று. கொஞ்சமும் ஏமாற்ற வில்லை.

பரத் வருவாரென்று நினைத்தேன். அது நடக்க வில்லை. அவர் எப்படியும் தனுஷுக்குப் பாடப் போகிறார். ஸ்ரீஷா வும் அப்படித்தான். பின்னணி பாட சான்ஸ் உன்டு என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது. அனுஷ்யா தான் கொஞ்சம் பாவம். அவள் பாடியதிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது “எந்த ஊர் போனாலும்”.

முந்தின சீசனில் மிகவும் சங்கீத அறிவுள்ள குழந்தைகளுக்கு (பிரகதி) முதலிடம் கிடைக்காத குறையை இந்த வருஷம் விஜய் டி.வி. போக்கி விட்டது.

எல்லாப் போட்டிகளின் முடிவிலும் ஏதாவது சர்ச்சை இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த முடிவுகளிலும் கண்டிப்பாக இருக்கும்.

ஸ்பூர்த்திக்கும், அவள் அப்பா அம்மாவுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். குழந்தைக்கு அபாரமான சங்கீத அறிவு இருக்கிறது. அதை ஸினிமா சங்கீதத்தில் கரைத்து விடாதீர்கள். ஒரு சுதா ரகுனாதன் போல, நித்யஸ்ரீ போல வர வேண்டிய குழந்தை.

நிறைய ஆசீர்வாதங்கள். நிறைய சுற்றிப் போடுங்கள்.

Friday, February 06, 2015

பிடித்த எழுத்தாளர்கள் – 2

ஆங்கிலத்தில் புத்தகம் படிக்க ஆரம்பித்தது கல்லூரி சென்ற பிறகுதான். உறவினர் ஒருவர் கல்லூரி நூலகத்திலிருந்து புத்தகங்கள் கொன்டு வந்து தருவார். அப்படி ஆரம்பித்ததுதான் ஆங்கிலப் புத்தகப் படிப்பு.

எனிட் ப்ளைட்டன் எழுதியது போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்கள் படித்ததே கிடையாது. ஏனென்றால், புத்தகம் படிக்க ஆரம்பிக்கும் போது குழந்தைப் பருவம் போய் விட்டது.
ஆரம்பத்தில் கஷ்டப் பட்டு ஏ.ஜே. க்ரானின், ஸாமர்ஸட் மாம், டு மாரியர் எல்லம் படித்தேன். பின் வந்தது என்னுடைய மிகப் பிடித்த எழுத்தாளர் எழுதிய புத்தகங்கள். அவர்தான் பி.ஜி. வுட் ஹவுஸ். இரண்டு மாத விடுமுறையில் அவருடைய 70 புத்தகங்களைப் படித்துத் தீர்த்தேன். நம்முடைய ‘தேவன்’ அவருடைய மறு உருவம்தான். இரண்டு பேரும் ஈடு இணையற்ற நகைச்சுவை எழுத்தாளர்கள். அவர்கள் போல இதுவரை நகைச்சுவையாக எழுத இதுவரைக்கும் பிறக்க வில்லை. இதற்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை பிடித்ததும், பிடிக்காததும் ஒவ்வொருவர் இஷ்டம். அதில் ‘ஏன்’ என்ற கேள்விக்கே இடமில்லை.

அடுத்த இஷ்டமான ஆங்கில எழுத்தாளர் ஜான் க்ரிஷாம். சரியான த்ரில்லர்கள். சுவையான கதைப் பின்னல்.

ராபின் குக், லுட்லும், டாம் க்ளான்ஸி,பாட்டர்ஸன்  போன்ற பலர் எழுதிய புத்தகங்கள் படித்திருந்தாலும் எனெக்கென்னவோ க்ரிஷாம் எழுத்து மிகவும் பிடிக்கும்.
நான் விரும்பும் இன்னொரு எழுத்தாளர் ஆர்தர் ஹெய்லி. அவருடைய ஒவ்வொரு புத்தகமும் ஒரு முத்து. புத்தகம் ஒவ்வொன்றும் ஒரு துறையைப் பற்றி இருக்கும். ஒரு புத்தகத்தைப் படித்து விட்டால் அத்துறையைப் பற்றிப் பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். மிக நுணுக்கமாகப் பின்னப்பட்ட கதைகள். அழுத்தமான, மனதில் நிற்கும்படியான கதா பாத்திரங்கள்.
இப்போது எழுதும் கதாசிரியர்களில் எனக்குப் பிடித்தவர் லீ சைல்ட். இவர் ஜாக் ரீச்சர் என்னும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து பல நாவல்கள் எழுதி விட்டார். எல்லாமே த்ரில்லர்கள்தான். என்ன மாதிரியான நடை தெரியுமா? துள்ளி ஒடும். நிறைய சம்பாஷணைகள். சின்னச் சின்ன வாக்கியங்கள். பெரும்பாலானவை இலக்கண சுத்தமாக இருக்காது. ஆனால் கதையை மிக வேகமாக நகர்த்திச் செல்லும்.

இப்போது சில இந்தியர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இல்லை இல்லை, ரொம்ப நாளாகவே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குஷ்வந்த் ஸிங், நயந்தாரா செகல், ஆர்.கே. நாராயண் போல பழைய எழுத்தாளர்கள். ரவி சுப்ரமணியன், சேதன் பகத், ரமேஷ் மேனன், ஆனந்த் நீலகண்டன், ஜும்பா லஹிரி (அமெரிக்கர், ஆனால் இந்திய வம்சாவளியினர்), அர்விந்த் அடிகா, அஷ்வின் சாங்கி போன்று இப்போது எழுதுபவர்கள் என்று நிறையப் படித்தாகி விட்டது.


அபுனைவுகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ‘அதுல் கவாண்டே’. இவர் அமெரிக்காவில் வாழும் ஒரு ஸர்ஜன். திறமையான சர்ஜன் மட்டுமில்லை, அதை விடத் திறமையான எழுத்தாளர். நாம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்களைத் தயங்காமல் சிபாரிசு செய்வேன்.

Thursday, February 05, 2015

பிடித்த எழுத்தாளர்கள்

படிப்பதில் ஆசை இருக்கும் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர்கள் இருப்பார்கள். எனக்கும் இருக்கிறார்கள்.

முதல் இடம் ‘கல்கி’க்குத்தான். நினைவு தெரிந்த நாளில் முதலில் படித்தது கல்கியின் எழுத்துக்கள்தான். மகா எளிமையான மொழி. கதை சொல்லும் உத்தியோ கேட்கவே வேண்டாம். அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். படித்து முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்கவே மனது வராது. “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, “தியாக பூமி”, “சோலைமலை இளவரசி” இப்படி எத்தனையோ. எல்லாப் புத்தகங்களையும் பலமுறை படித்திருக்கிறேன். “அமர தாரா” தான் ஒரே ஒரு தடவை படித்தது.

கல்கியின் எழுத்துக்கள் பற்றி பலவிதமான விமர்சனங்கள் உண்டு. ஒரு சமீபத்திய எழுத்தாளர் அவர் குழந்தை எழுத்தாளர் என்று எழுதினார். சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக் கொண்டவர் ஏராளம். அவருடைய சமூகக் கதைகள், அவரின் சரித்திரக் கதைகள் அளவுக்கு அங்கீகாரம் பெற வில்லை என்றே தோன்றுகிறது.
நேர்த்தியான பாத்திரப் படைப்பு, நாம் பேசுவது போலவே எழுதப்பட்ட உரையாடல்கள் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்த இடம் ‘தேவன்’ என்ற கதாசிரியருக்குத்தான். ‘ராஜத்தின் மனோரதம்’, ‘ஜஸ்டிஸ் ஜகன்னாதன்’, ‘ஸி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’ இப்படி நிறைய மாஸ்டர்பீஸ்கள் உண்டு. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் படியாக எழுதும் மந்திர நடை. அதை நம் கையகப்படுத்திக் கொள்ளுவது மிகவும் சிரமம்.

ரா.கி. ரங்கராஜன் ஒரு ஆச்சரியமான எழுத்தாளர். அவருடைய கற்பனைத் திறன் அசாத்தியமானது. எழுதித் தள்ளிய எழுத்தாளர்களில் இவர் குறிப்பிடத் தகுந்தவர். சரித்திரக் கதை, திகில் கதை, துப்பறியும் கதை, சமூக நாவல் இப்படி எதையும் விட்டு வைக்காதவர். கதை எழுதுவது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தவர்.

நான் கல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்தவர் சுஜாதா. நண்பர்களுக்குள் நடந்த சூடான விவாதங்கள் சுஜாதாவின் கதைகளைப் பற்றியதாகவே இருக்கும். நைலான் கயிறில் ஆரம்பித்தது கதை கதையாக, தொடர் தொடராகத் தொடர்ந்தது. ஒரு மனிதன் இவ்வளவு விஷயங்களைப் பற்றி சுவாரசியம் குறையாமல் எழுத முடியுமா என்று ஆச்சரியப் பட வைத்த எழுத்தாளர் சுஜாதா.

இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்தவர் பா.ராகவன். இவரது இரண்டு அபுனைவுத் தொடர்களைப் படித்தவுடன் அவர் எழுத்து நடையால் கவரப் பட்டேன். அதனால் அவருடைய வலைத் தளம், ட்விட்டர் செய்திகள் ஆகியவற்றைப் படிக்க ஆரம்பித்து விசிறியாகி விட்டேன். சரியான இளையராஜா, மாக் இவைகளின் வெறியர் என்று தோன்றுகிறது. அதே போல் தன்னுடைய பிழையில்லாத எழுத்தில் அபாரப் பெருமை கொண்டவர். பலருக்கு எழுத்திலும், இலக்கணத்திலும் வாத்தியார். இப்போது இணையத்தில் எழுதப்படும் தமிழில் மலிந்திருக்கும் பிழைகளை எப்படித்தான் சகித்துக் கொள்கிறாரோ தெரியாது. அவ்வப்போது ஒன்றிரு குறுஞ் செய்திகளோடு சரி.


நாக்கைக் கன்னத்துக்குள் மடித்து வைத்துக் கொள்ளுவது என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்வழக்கு உள்ளது. அதற்குச் சரியான உதாரணம் எழுத்தாளர் பேயோன். அவருடைய சில ட்விட்டர் செய்திகள் மாணிக்கங்கள். படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. தனக்கு சாகித்ய அகாடமியிலிருந்து நோபல் பரிசு வரை கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, கருத்து உள்ளவர். இறைவன் செவி சாய்ப்பார் என்று நம்புவோம். 

Friday, January 23, 2015

மொழிபெயர்ப்பு

எழுதும் ஆர்வம் வந்தபிறகு எதைப் பற்றி எழுதுவது என்பது பெரிய கேள்விக் குறியானது. சிறு கதையா? நாவலா? அபுனைவுக் கட்டுரைகளா? இப்படிப் பல கேள்விகள் எழுந்தன எனக்குள்.
ஏன் நல்ல புத்தகங்களை (ஆங்கிலத்தில் வந்ததை) மொழி பெயர்த்துப் பார்க்கக் கூடாது? இது எழுத்துக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று தோன்றியது. முதல் விஷயம், எழுதும் பொருளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏற்கனவே யாரோ ஒருவரெழுதி வைத்திருக்கிறார். நம்முடைய வேலை சுவை குறையாமல் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியதுதான்.

இந்த எண்ணம் வந்த பிறகு சில மொழி பெயர்ப்பு நூல்களைப் படித்தேன். எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்று கவனித்தேன். மொழிபெயர்ப்பு என்று தெரியும்படியாகவே இல்லை. தமிழிலேயே எழுதப் பட்ட நூலாகத் தெரிந்தது.
எந்த நூலை மொழிபெயர்த்துப் பார்ப்பது? என்னுடைய வாசிப்பு ஒரு மாதிரியானது. கதை, கட்டுரை இப்படி ஒன்றும் விலக்கற்பாடில்லை. எனக்குப் பிடித்தமான புத்தகம் ஒன்றைஎடுத்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.

இந்த வேலையை ஆரம்பித்ததும்தான் இது எத்தனை சிரமமான வேலை என்று புரிந்தது. கொஞ்ச நாட்கள் முன்பாக கிழக்குப் பதிப்பகம் மூலமாக நடத்தப்பட்ட மொழிபெயர்ப்புப் பட்டறையின் ஒலி வடிவத்தைக் கேட்டேன். அதில் பேசிய மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் கூறிய விஷயங்களைக் கவனமாகக் கேட்டேன்.

மொழிபெயர்ப்பில் இரண்டு விதங்கள் உண்டு. ஒன்று, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பது. இரண்டு, எழுதியதை உள்வாங்கிக் கொண்டு தன் நடையில் எழுதுவது. முதல்முறையில் மிகவும் சிரமங்கள் உண்டு. ஆங்கில பழக்க வழக்கங்கள் வேறு, நம் வழக்கங்கள் வேறு. ஆகவே அவற்றைச் சொல்லும்  வழியும் மொழியும் வேறு. பார்க்கலாம் என்று துணிந்து காரியத்தில் ஈடு பட்டேன்.

முதல் புத்தகம் Children’s Geetha. திரு ராமானந்த ப்ரசாத் Ph.D எழுதிய புத்தகம். 
சிறுவர்களுக்கான கீதை. கதைகளைக் கலந்து கீதையின் முக்கியமான ஸ்லோகங்களைப் பற்றி விவரிக்கும் நூல். ஆரம்பத்தில் வேகமாகச் சென்ற மொழிபெயர்ப்பு அத்தியாயங்கள் போகப் போக மெதுவாகிப் போனது. மூல நூலில் சொல்லப்பட்ட கனமான விஷயங்களை மொழி பெயர்க்க நமக்கே கீதையைப் பற்றி நிறையத் தெரிந்திருக்க வேண்டும்.
இது நடந்து கொண்டிருக்கும் போதே இன்னும் சில புத்தகங்களை மொழிபெயர்க்க முயற்சி செய்தேன்.

அதுல் கவாண்டே என்ற அமெரிக்க சர்ஜன் எழுதிய Cheklist manifesto. மிக அருமையான புத்தகம். மிக அருமையான எழுத்தாளர். இதிலும் கொஞ்சப் பக்கங்கள் மொழி பெயர்த்தபின் வேகத் தடையாயிற்று. மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்தைகளுக்கு சரியான மொழிபெயர்ப்பு தெரியாததால் விளைந்த தடை இது. ஆனாலும் சமாளித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
கொஞ்ச வருஷங்கள் முன்னால் குமுதம் இதழில் ‘ரத்தக் குழாயில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற தொடர் வந்தது. ஐஸக் அஸிமோவ் எழுதிய Fantastic Voyage என்ற புத்தகத்தின் அற்புதமான மொழிபெயர்ப்பு. அதன் ஆசிரியர் மொழிபெயர்ப்பில் கில்லாடியான ரா.கி. ரங்கராஜனாக இருக்க வேண்டும். அஸிமோவ் அதற்குப் பிறகு  Fantastic Voyage II எழுதியிருக்கிறார். ரொம்பவும் சுவையான நாவல். இதை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆனந்த் நீலகண்டன் என்பவர் ASURA  என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ராவணனைப் பற்றி அவன் சிறு பிராயத்திலிருந்து விவரிக்கும் புத்தகம். இது இன்னொரு கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்ட கதை. இதிலும் இரன்டு அத்தியாங்கள் போயிருக்கின்றன.

நடுவில் அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் பற்றி “Nowhere to Hide” என்ற புத்தகத்தைப் படிக்க நேரிட்டது. எந்த விதமான த்ரில்லருக்கும் குறைவில்லாத நிஜக் கதை. இதை மொழிபெயர்க்க ஆசையாக இருந்தது. இதை “ஒளிவதற்கு இடமில்லை” என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வருகிறேன்.

இதெல்லாம் என் சொந்த முயற்சி. காபிரைட் விஷயங்களால் இதைஎல்லாம் வெளியிட முடியுமா என்று தெரியாது. ஆனாலும் எழுதிப் பழக இது மிக நல்ல பயிற்சியாக அமைந்தது.

இப்போது வெளிவரும் பல தமிழ் புத்தகங்களுக்கே மொழிபெயர்ப்புத் தெவையாக இருப்பது வேறு விஷயம்!!